

சென்னை,
இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் 3-ந்தேதி நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்துசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நீட் மறுதேர்வு ஜூன் 21-ந்தேதி நடைபெற்றது. இதற்கிடையே நீட் தேர்வுக்கு ஏற்கனவே செலுத்திய கட்டணம் மாணவர்களுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும், விண்ணப்பதாரர்கள் ஜூலை 7-ந்தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கிக்கணக்கு தொடர்பான விவர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்திருந்தது.
அந்த வகையில், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வு கட்டணத் திரும்பப் பெறுதல் (ரீபண்ட்) செயல்முறையை தேசிய தேர்வு முகமை தற்போது தொடங்கியுள்ளது. ஏற்கனவே தங்களது வங்கி கணக்கு விவரங்களை சரியாக உறுதி செய்து சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு, கட்டணத் தொகை திரும்ப வழங்கும் பணிகள் நேரடியாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதே வேளையில், தங்களது வங்கி விவரங்களை இதுவரை சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் அதனைப் புதுப்பிப்பதற்கான இறுதி அவகாசத்தை என்.டி.ஏ. அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இதுவரை 8,29,510 விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களது வங்கி கணக்கு விவரங்களைச் சரிசெய்து புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனடியாக தங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ரீபண்ட் பெற இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று நள்ளிரவு 11.50 மணிக்குள் தங்களின் வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்குமாறு என்.டி.ஏ. அறிவுறுத்தியுள்ளது.