

சென்னை,
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
இந்நிலையில் வானிலை நிலவரம் குறித்து வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று கூறுகையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அப்படியே உள்ளது. அதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இது கோடை மழை ஆகும். நாளை (புதன்கிழமை) முதல் மழையின் அளவு குறைந்துவிடும் என்றார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:
சூளகிரி 7 செ.மீ., தேன்கனிகோட்டை 6 செ.மீ., புள்ளம்பாடி 4 செ.மீ., தேனி மாவட்டம் கூடலூர் 3 செ.மீ., பூதப்பாண்டி, தாராபுரம், குழித்துறை, போடிநாயக்கனூர் தலா 2 செ.மீ., ஆயிக்குடி, தளி, மேட்டூர் தலா 1 செ.மீ.