

சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருபதாவது;-
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மாதந்தோறும் நமது பாரத மக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றும் "மனதின் குரல்" நிகழ்ச்சியின் இன்றைய 135-ஆவது அத்தியாயத்தில், நமது தேசம் தற்சார்பு பாரதமாக தலைநிமிர்ந்து வருவதை குறித்து விரிவாகப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது.
நிகழ்வில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட C-295 ராணுவ விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதையும், மூன்று உள்நாட்டு கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட்டதையும் நமது பிரதமர் பெருமையோடு குறிப்பிட்டார். மேலும், தங்கம் வாங்குவதைக் குறைப்பது, பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவது என நமது பிரதமர் விடுத்த கோரிக்கைகளை ஏற்று, பாரத மக்கள் அவற்றை பின்பற்றியதோடு, அதனை சமூக வலைத்தளங்களிலும் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்து, தேச மக்களுக்கு அவர் நன்றி கூறியது நம்மை நெகிழச் செய்தது.
அஸ்ஸாமில் பெண்கள் அனைவரும் இணைந்து அழிந்து வரும் ஹர்கீலா பறவையை மீட்டெடுத்த நிகழ்வை பெருமையோடு குறிப்பிட்டார். மேலும், எளிய தவணைத் தொகையில், பெரும் பலனையும் பாதுகாப்பையும் தரும் பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் நமது பிரதமர் எடுத்துரைத்ததனால், மக்களிடையே இத்திட்டங்களைக் குறித்த பெரும் விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
இறுதியாக, வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி திருநாளில், சுற்றுச்சூழலுக்கு உகந்த திருவுருவச் சிலைகளை உள்ளூர் கைவினைக் கலைஞர்களிடம் வாங்க வேண்டும் என நமது பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையை ஏற்று நாமும் உள்ளூரிலேயே திருவுருவச் சிலைகளை வாங்குவோம்! சுற்றுச்சூழலையும், உள்நாட்டு வணிகத்தையும் காக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவோம்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.