இன்றைய தற்காலிக சிரமம்.. நாளைய சிறந்த சென்னைக்கு ஒரு வாய்ப்பு - தெற்கு ரெயில்வே

புறநகர் ரெயில் சேவைகள் குறைப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க மக்களுக்கு தெற்கு ரெயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்றைய தற்காலிக சிரமம்.. நாளைய சிறந்த சென்னைக்கு ஒரு வாய்ப்பு - தெற்கு ரெயில்வே
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை (45 நாட்கள்) இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது.

அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையில் இருந்தும். மறுமார்க்கமாக வரும் ரெயில்கள் 5-வது நடை மேடையில் இருந்தும் இயக்கப்பட்டன. இதற்காக தற்காலிக கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன.

இதில் கொடுமையாக, எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது. இதனால், பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன.

இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரெயில்கள் நகரவே இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மற்றும் செய்வதறியாது திகைத்த பயணிகள், ரெயில் பழுதாகிவிட்டதோ என்ற அச்சத்தில் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் இறங்கி நடக்க தொடங்கினர். மேலும், எப்போது தான் ரெயில் வருமோ என ரெயில் நிலையங்களிலும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இந்த நிலையில், சென்னையில் 2-வது நாளாக இன்றும் புறநகர் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. நேற்றை போலவே இன்றும் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டில் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து ரெயில்கள் நிறுத்தப்பட்டன. அனைத்து ரெயில்களும் எழும்பூர் நடைமேடை சிக்னலுக்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

சென்னையில் புறநகர் சேவை இரண்டாவது நாளும் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்வபவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஊருக்கு சென்று மீண்டும் சென்னைக்கு திரும்புபவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இன்றைய தற்காலிக சிரமம், நாளைய சிறந்த சென்னைக்கு ஒரு வாய்ப்பு என்றும், புறநகர் ரெயில் சேவையில் குளறுபடி ஏதும் இல்லை என்று தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் முக்கிய மறுசீரமைப்பு பணிகள் 45 நாட்கள் காலத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இக்காலப்பகுதியில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்குமாறு தெற்கு ரெயில்வே. சென்னை கோட்டம் மனமாரக் கேட்டுக்கொள்கிறது.

இந்த முக்கிய கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு பிரிவில் சில புறநகர் ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதும், சில சேவைகள் மாற்றி அமைக்கப்படுவதும் இடம்பெற்றுள்ளது. இந்நடவடிக்கைகள் அனைத்தும் கவனமாக திட்டமிடப்பட்டவை ஆகும். திட்டமிட்ட காலக்கெடுவில் பாதுகாப்பாகவும் திறம்படவும் பணிகளை நிறைவேற்றுவதற்காக அவை அவசியமானவை.

இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டத்தின் நோக்கம், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய, பயணிகள் நட்பு நிலையமாக மாற்றுவதாகும். மேம்பட்ட வசதிகள், உயர்ந்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றை உருவாக்குவதே இத்திட்டத்தின் குறிக்கோள்.

இத்தற்காலிக மாற்றங்கள் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனினும், தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்கும் வருங்கால தலைமுறைகளுக்கும் நீண்டகால நன்மைகளை வழங்க இவை அவசியமானவை.

சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்படாத மற்றும் தவறான தகவல்கள் பரவி வருகின்றன என்பது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, செயல்பாட்டு தோல்வி அல்லது பாதுகாப்பற்ற ரெயில் இயக்கம் குறித்த தவறான தகவல்கள் தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

அனைத்து ரெயில் இயக்கங்களும் நிலையான பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ் கடுமையான கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துகிறோம். பயணிகள் பாதிப்பு குறித்த முழுமையான மதிப்பீட்டின் பின்னரே இந்த செயல்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர், கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் மற்றும் செயல்பாட்டு துறை அதிகாரிகள் இணைந்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி, பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தி உள்ளனர்.

பயணிகள் அனைவரும் தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல் வழிகளை மட்டுமே நம்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் தொடர்ந்த ஒத்துழைப்பும் புரிதலும் உடன், இந்த எழும்பூர் மறுசீரமைப்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி, அனைவருக்கும் பாதுகாப்பான, திறம்பட்ட மற்றும் வசதியான பயண அனுபவத்தை உருவாக்கும் என்பதை நாங்கள் நம்புகிறோம்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com