சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - ஈ.ஆர். ஈஸ்வரன்

லாரி தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது என்பதையும் நினைவு கொள்ள வேண்டும். என்று ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன்
ஈ.ஆர். ஈஸ்வரன்
Published on

சென்னை,

சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கொங்கு மண்டலம்

இந்தியாவிலேயே போக்குவரத்து நகரமாக விளங்குவது கொங்கு மண்டலம். குறிப்பாக நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் லாரிகள் அதிக அளவில் உள்ளது. அதுவும் குறிப்பாக நாமக்கல் டாரஸ் லாரிகள், கேஸ் நிரப்பும் எல்பிஜி லாரிகள், ட்ரெய்லர் லாரிகள் நிறைந்த பகுதியாகும். கேஸ் லாரிகள் தென்மாநிலத்தை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.

சுங்க கட்டண உயர்வு

நாமக்கல்லில் இதை தவிர்த்து கோழி, டெக்ஸ், பள்ளிகள் என அனைத்திற்கும் கனரக, இலகுரக வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். லாரி தொழில் பல்வேறு சிரமங்களால் தொழிலே நடத்த முடியாத இக்கட்டான நிலையில் உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சுங்க கட்டண உயர்வு அத்தொழிலின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

கோரிக்கை வைத்துள்ளோம்

60 கிலோ மீட்டருக்கு குறைவான இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகளைகளையும், நகர்புற சுங்கச்சாவடிகளைகளையும், காலாவதியான சுங்கச்சாவடிகளையும் அகற்ற பலமுறை எங்கள் கட்சியின் முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மந்திரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் பலன் இல்லை. இதே நிலைமை நீடித்தால் சுங்கச்சாவடியால் லாரி தொழில் முற்றிலுமாக முடக்கப்படும்.

மத்திய அரசு முன்வர வேண்டும்

இவ்வாறு இருக்கும் காலகட்டத்தில் சுங்க கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள இயலாது. எனவே உடனடியாக சுங்க கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன் காலாவதியான சுங்கச்சாவடிகள், 60 கிலோமீட்டர் குறைவான சுங்கச்சாவடிகள், நகர்ப்புற சுங்கச்சாவடிகளையும் அகற்ற உடனடியாக மத்திய அரசு முன்வர வேண்டும்.

லாரி தொழில்

இதனை தமிழக அரசும் கவனத்தில் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அப்பொழுதுதான் லாரி தொழில் ஓரலவுக்காவது நடத்தக்கூடிய நிலைமைக்கு வரும். மேலும் இந்த தொழிலை நம்பி பல லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கிறது என்பதையும் நினைவு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com