'சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்

முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் சுங்கக்கட்டணத்தை நீக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
'சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்
Published on

சென்னை,

சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும், சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக் கூடாது என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது. தென் மாநிலங்களில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் இருந்து மட்டும் ரூ.132 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

அரசு நிறுவனமே விதிகளை மதிக்காமல் அப்பாவி மக்களிடம் சுங்கக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. செங்கல்பட்டு சுங்கச்சாவடியையும், திண்டிவனம் சுங்கச்சாவடியையும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1.20 லட்சம் வாகனங்கள் கடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் ஒரு நாளைக்கு ரூ.11 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலாவதாக கணக்கு காட்டப்பட்டால், அதில் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.

செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் சுங்கச்சாவடிகளில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே சுங்கச் சாவடிகளின் கட்டண வசூல்கள் இப்படித் தான் பராமரிக்கப்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தில் பாதியாவது கணக்கில் காட்டப்படுமா? என்பதே ஐயமாகத் தான் இருக்கிறது.

சுங்கச்சாவடிகளும், அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்களும் மர்மமாகவே நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக் கூடாது.

எனவே, பரனூர் சுங்கச்சாவடியில் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும். அதன்மூலம் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் சுங்கக்கட்டணத்தை நீக்க வேண்டும்."  இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com