

காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான அகரம், மருதேரி, பண்ணந்தூர், பனங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதங்களில் தக்காளி விளைச்சல் குறைவாக இருந்ததால் ஒரு கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையானது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி பயிரிட்டனர்.
இதன் பின் தக்காளி செடிக்கு ஏற்ற இதமான காலநிலை நிலவியதால் செடிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் மார்க்கெட் மற்றும் சந்தைகளுக்கு தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.1-க்கு விற்பனையானது. இதையும் வியாபாரிகள் வாங்க முன் வரவில்லை.
தற்போது தொடர் மழை காரணமாக தோட்டங்களில் மழைநீர் தேங்கி, செடிகளிலேயே தக்காளி அழுகி வருகிறது. இதனால் விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடிகளிலேயே அப்படியே விட்டு விட்டனர். போச்சம்பள்ளி பகுதியில் மீன் குத்தகைதாரர்கள் தங்களாகவே முன்வந்து ஆட்களுக்கு கூலி கொடுத்து தக்காளியை பறித்து செல்கின்றனர். தக்காளியை டிராக்டர் மூலம் கொண்டு சென்று ஏரியில் கொட்டி மீன்களுக்கு உணவாக்கி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.