தக்காளி விலை கிடு, கிடு உயர்வு; ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை

அய்யலூர் தக்காளி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது.
தக்காளி விலை கிடு, கிடு உயர்வு; ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை
Published on

அய்யலூர் தக்காளி சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது.

தக்காளி சந்தை

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் டன் கணக்கில் இந்த சந்தைக்கு தக்காளி விற்பனைக்காக வருகிறது. வியாபாரிகள் இங்கு வரும் தக்காளி பெட்டிகளை தரத்திற்கு தகுந்தவாறு மொத்தமாக ஏலம் எடுத்து தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு எடுத்துச்செல்கின்றனர்.

அய்யலூர் சந்தையில் கடந்த மாதம் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநில தக்காளிகளின் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்தது. அப்போது 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தக்காளிகளை சாலையோரம் கொட்டி சென்ற அவல நிலை இருந்தது.

விலை உயர்வு

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைந்தது. இதனால் அய்யலூர் சந்தையில் தக்காளி விலை சற்று உயர்ந்து 14 கிலோ கொண்ட பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதன் விலை மேலும் உயர்ந்தது. அதாவது அய்யலூர் சந்தைக்கு தக்காளி வரத்து வழக்கத்தை காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

அதன்படி, நேற்று 14 கிலோ கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ.1,100 முதல் ரூ.1,200 வரை ஏலம் போனது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தங்கம் விலைக்கு...

இதற்கிடையே திண்டுக்கல்லில் உள்ள மார்க்கெட்டுகளில் நேற்று சில்லரை விலையில் தக்காளி ஒரு கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்தனர். இனிமேல் வீட்டின் சமையலில் தக்காளியின் தேவையை குறைத்து, மாற்று காய்கறிகள் மூலம் குழம்பு வைக்க வேண்டும் என்றும், தங்கம் விலைக்கு தக்காளி விலை உயர்ந்துவிட்டதாகவும் அவர்கள் புலம்பியபடி சென்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com