வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை 6-வது நாளாக தொடர்ந்து சரிவு

வரத்து அதிகரிப்பால், தக்காளி விலை 6-வது நாளாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 6 நாட்களில் கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை குறைந்துள்ளது.
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை 6-வது நாளாக தொடர்ந்து சரிவு
Published on

சென்னை,

தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து கடந்த மாதம் (ஜூலை) ஆரம்பத்தில் இருந்து அதன் விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. அதன் பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் சென்றது மட்டுமல்லாமல், வெளி மார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.200 வரை சென்றது.

தக்காளியை வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை எகிறியது. விலை எப்போதுதான் குறையும்? என்று இல்லத்தரசிகள் எதிர்பார்த்தபடியே இருந்தது. இந்தநிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து விலை சரியத் தொடங்கியது.

அந்தவகையில் கடந்த 2-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உச்சத்தில் இருந்த தக்காளி அதற்கு மறுநாளில் கிலோவுக்கு ரூ.10 குறைந்தது, அதற்கு அடுத்த நாளில் இருந்து கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை குறைந்து கொண்டே வந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்றும் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 6 நாட்களில் மட்டும் தக்காளி கிலோவுக்கு ரூ.60 முதல் ரூ.80 வரை குறைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து ஓரளவுக்கு அதிகரித்து இருப்பதால், அதன் விலை குறைந்து வருவதாகவும், இனி வரக்கூடிய நாட்களிலும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். விலை தொடர்ந்து குறைந்து வருவதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com