தக்காளி விலை சற்று குறைந்தது

தியாகதுருகம் பகுதியில் தக்காளி விலை சற்று குறைந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது
தக்காளி விலை சற்று குறைந்தது
Published on

தியாகதுருகம்

புளிக்கு பதிலாக

தமிழர்கள் உணவில் புளிப்பு சுவையை சேர்க்க புளிக்கு பதிலாக தக்காளியை பயன்படுத்த தொடங்கினர். அதன் பிறகு தக்காளி இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தக்காளியின் விலை தங்கத்தின் விலையைப்போல் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது.

இதனால் தக்காளி வாங்கும் அளவை குறைக்க வேண்டிய நிலைக்கு இல்லத்தரசிகள் தள்ளப்பட்டனர். பெரும்பாலான வீடு மற்றும் உணவகங்களில் தக்காளி சட்னி, தக்காளி சாதம் ஆகியவை தவிர்க்கப்பட்டது. தக்காளிக்கு மாற்றாக புளி, மங்காய் ஆகியவற்றையும் பயன்படுத்தினர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தக்காளியின் விலை உச்சத்தை தொட்டது. அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.200 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கியது. தியாகதுருகம் பகுதியில் தக்காளி அதிகபட்சமாக ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பாதியாக குறைந்தது

ஆனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை சற்று குறைந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் ஓரளவு ஆறுதல் அடைந்து தக்காளியை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்திற்கு பெரும்பாலும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. இயற்கை சீற்றம் மற்றும் கோடைக்காலத்தில் விளைச்சல் குறைவாக இருந்ததாலும் தக்காளி விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது. தற்போது கள்ளக்குறிச்சி பகுதிக்கு ஆந்திரா மற்றும் பெங்களூர் பகுதியில் இருந்து தக்காளி வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது. இதனால் கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளியின் விலை பாதியாக குறைந்து தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒசூர் தக்காளி

இதுகுறித்து தியாகதுருகத்தை சேர்ந்த காய்கறி கடை உரிமையாளர் கவுதம் கூறும்போது, கடந்த மாதம் தக்காளியின் விலை அதிகரித்தது. இதனால் அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனை செய்தோம். பொதுமக்களும் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்கி சென்றனர். ஆனால் கடந்த 15 நாட்களாக ஒசூர் பகுதியில் இருந்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து தற்போது ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் காய்கறிகளுடன் சேர்த்து தக்காளியை வாங்க தொடங்கியுள்ளனர். இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com