

கடலூர்,
கடலூர் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால், கடந்த ஒரே வாரத்தில் கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை குறைந்து அதிரடி வீழ்ச்சி கண்டுள்ளது.
சமையலில் தக்காளிக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. பெரும்பாலான குழம்புகள் மட்டுமின்றி, குறிப்பாக அசைவ உணவு சமைப்பதற்கு தக்காளி தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தக்காளியின் விலை சமீபகாலமாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கடலூருக்கு தக்காளி வரத்து திடீரென குறைந்தது. இதனால் தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து, கடந்த வாரம் மொத்த விற்பனையில் 55 ரூபாய்க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ 60 ரூபாய் வரையிலும் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், கடலூர் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலை கிடுகிடுவென சரிய தொடங்கியுள்ளது. கடலூரில் நேற்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி மீண்டும் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதாவது, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. சந்தையில் மற்ற காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் வேளையில், தக்காளியின் இந்த விலை குறைவு இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதியையும், பெரு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.