செடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட தக்காளி

கம்பம் பகுதியில் விலை வீழ்ச்சியால் செடியிலேயே தக்காளி பறிக்காமல் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
செடியிலேயே பறிக்காமல் விடப்பட்ட தக்காளி
Published on

தக்காளி சாகுபடி

கம்பம் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளான நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை, வாழை, திராட்சை, பீட்ரூட், முள்ளங்கி, தக்காளி ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை கிடு, கிடுவென உயர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. தக்காளிகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் விழி பிதுங்கி நின்றனர். வீடுகளில் சமையலுக்கு தக்காளியை பயன்படுத்துவதில் இல்லதரசிகள் சிக்கனத்தை கடைப்பிடித்தனர். மார்க்கெட்டில் வரத்து குறைந்ததையடுத்து விவசாயிகள் தக்காளி சாகுபடி பரப்பளவை அதிகரித்தனர். அதில் குறிப்பாக கம்பம் அருகேயுள்ள ஆங்கூர்பாளையம் பகுதியில் விவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஆர்வம் காட்டினர்.

விலை வீழ்ச்சி

இந்நிலையில் தற்போது தக்காளி அறுவடைக்கு தயாரான நிலையில், மதுரை, ஒட்டன்சத்திரம், சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வரத்து அதிகரித்தது. இதனால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து, கிலோ ரூ.7-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் கம்பம் ஆங்கூர்பாளையம் பகுதியில் சில இடங்களில் தக்காளி அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுள்ளனர். மார்க்கெட்டில் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி வரத்து குறைவாக இருந்தது. இதையடுத்து அதிகளவில் தக்காளி சாகுபடி செய்தோம். தற்போது தக்காளி அறுவடைக்கு தயாரான நிலையில் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த விலை அறுவடை கூலி, பராமரிப்பு, உரம் செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லை. எனவே இந்த விலை ஏற்ற, தாழ்வை சரிசெய்யும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் தேனி மாவட்டத்தில் தக்காளி மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைத்தால் விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com