

சென்னை,
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் மே-3ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதன்படி, தினமும் சுமார் 5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 20 ஆயிரம் பேர் வரை போட்டி போட்டு விண்ணப்பிக்கிறார்கள். நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, 2 லட்சத்து 81 ஆயிரத்து 502 விண்ணப்பங்கள் வந்து இருக்கின்றன.
இதில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 627 பேர் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியிருக்கின்றனர். அவர்களில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 53 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பிப்பதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.
ஆவணங்களை சமர்ப்பிக்க 6-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. 5-ந்தேதி ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. அதனைத்தொடர்ந்து 8-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, 29-ந்தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகிறது. கலந்தாய்வு எப்போது தொடங்கும்? என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.