விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கி சித்ரவதை: காவல் அலுவலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ

விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கி சித்ரவதை செய்த காவல் அலுவலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கி சித்ரவதை: காவல் அலுவலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - வைகோ
Published on

சென்னை,

விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கி சித்ரவதை செய்த காவல் அலுவலர் பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் ஐ.பி.எஸ்., தமது காவல்பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் புகாருக்கு உள்ளாகும் விசாரணைக் கைதிகளின் வாயில் கற்களைப் போட்டு கன்னத்தில் அடித்ததாகவும், கட்டிங் பிளேடால் பல கைதிகளின் பற்களைப் பிடுங்கிக் கொடுமைப்படுத்தியதாகவும், புதிதாக திருமணமான ஒருவர் புகாருக்கு ஆளான நிலையில், அவரது விதைப் பையை நசுக்கி சித்ரவதை செய்ததாகவும், இதனால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் கிடைத்த செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இவை காவல் நிலையங்களில் இதுவரை கேள்விப்படாத காட்டுமிராண்டித்தனமான செயல்களாகும். பெருமைக்குரிய இந்திய காவல் பணி நிலையில் உள்ள ஓர் அலுவலரின் இச்செயல்கள் கடுமையான குற்றச் செயல்களாகும். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அலுவலரை காத்திருப்போர் பட்டிலில் வைத்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி வழிகாட்டுதலில் முழுமையான அர்ப்பணிப்புடன் மக்கள் போற்றும் வகையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காவல்துறையின் பெருமைக்கு இப்படிப்பட்டவர்களால் களங்கம் ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக விசாரித்து, பாதிக்கப்பட்டோரிடம் புகார்கள் பெற்று, இவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com