

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.
முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் விஜய் கோரிக்கை வைத்தார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கவர்னரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், விஜய்யின் சந்திப்பை தொடர்ந்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கவர்னர் அர்லேகரை இன்று சந்திக்க உள்ளனர். தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கவர்னரை சந்திக்க உள்ளார். அதனை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோரும் கவர்னரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது முதல்-அமைச்சர் பதவி ஏற்பு விழா, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.