பார்வையற்ற தம்பதிக்காக ஒட்டு மொத்த கிராம மக்கள் போராட்டம்

மயிலாடும்பாறையில் ஆக்கிரமிப்பில் இருந்த பார்வயற்ற தம்பதியினர் வீடு இடித்து அகற்றப்பட்டதால் ஒட்டு மொத்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்டோக்கள் ஓடவில்லை.
பார்வையற்ற தம்பதிக்காக ஒட்டு மொத்த கிராம மக்கள் போராட்டம்
Published on

ஆக்கிரமிப்பு அகற்றம்

தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியில் பார்வையற்ற தம்பதியான ஜெயபால்-நிர்மலா உள்பட 4 பேர் வீடு கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் அந்த நிலத்தின் உரிமையாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி நடந்தது. அப்போது பார்வையற்ற தம்பதியினர் உள்பட 4 பேரின் வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

இதில் மனமுடைந்த பார்வையற்ற தம்பதியினர் ஜயபால், நிர்மலா, அவர்களது 10-ம் வகுப்பு படிக்கும் மகளும் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று அவர்கள் சிகிச்சை முடிந்து மயிலாடும்பாறைக்கு திரும்பினர். பின்னர் அந்த கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் அவர்கள் தங்கினர்.

கடை அடைப்பு போராட்டம்

இதையடுத்து நேற்று பார்வையற்ற தம்பதியினரின் வீடு இடிக்கப்பட்டதை கண்டித்து மயிலாடும்பாறையில் வியாபாரிகள் கடை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. கிராமத்தில் ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. ஊரே வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்று காலை 10 மணிக்கு காளியம்மன் கோவில் முன்பு கிராம மக்கள் கூட்டம் நடத்தினர். அதில் கிராம கமிட்டியினர் மூலம் மக்களிடம் நிதி திரட்டி பார்வையற்ற தம்பதியினருக்கு புதிய வீடு கட்டி கொடுப்பது என்றும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்வதும், அதிகாரிகள் மூலம் தனியார் நிலத்தை அளவீடு செய்து கோவில் நிலத்தை மீட்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஊரை விட்டு தள்ளி வைப்பு

மேலும் பார்வையற்ற தம்பதியினருக்கு வீடு கட்டுவதற்கு தனியார் நில உரிமையாளர் இடம் வழங்க வேண்டும். அவர் இடம் கொடுக்கும் வரை அவரது குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதாகவும், அவருடைய தோட்ட வேலைக்கு யாரும் செல்லக்கூடாது என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

வீடு இடிக்கப்பட்டபோது பார்வையற்ற தம்பதியின் மகளுடைய புத்தகங்கள் மண்ணில் புதைந்து போயிற்று. இதையடுத்து அந்த மாணவிக்கு புத்தகங்கள், பை ஆகியவற்றை கிராம மக்கள் வழங்கினர்.

ஒரு பார்வையற்ற தம்பதியின் குடும்பத்திற்காக ஒட்டுமொத்த கிராமமும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com