சுற்றுலாத் துறையின் வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு - தமிழக அரசு பெருமிதம்


சுற்றுலாத் துறையின் வருமானம் 5 மடங்கு அதிகரிப்பு - தமிழக அரசு பெருமிதம்
x

சுற்றுலாத் துறைக்கு அளிக்கும் ஊக்கத்தால் வெளிநாட்டு - உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

சுற்றுலா, புதுமை காணும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. புத்துணர்ச்சி அளிக்கிறது; அறிவு வளர்ச்சிக்கும், ஆற்றலின் பெருக்கத்திற்கும் துணைபுரிகிறது. நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பதிலும், வேலை வாய்ப்புகள் வழங்குவதிலும் இன்று சுற்றுலாத்துறை பெரிய காரணியாக விளங்குகிறது. உலக அளவில் நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதிலும், மனித நாகரிகத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

தமிழ்நாட்டில் சுற்றுலா வளம்

தமிழ்நாடு இயற்கை எழில் குலுங்கும் காட்சிகளை அதிகம் கொண்டுள்ளது. பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைகளைக் கொண்டுள்ளது தமிழ்நாடு. உலகில் இரண்டாவது மிக நீளமான நகர்புற கடற்கரை தமிழ்நாட்டில் உண்டு. இந்தியாவின் மொத்த கடற்கரையில் இது 13 சதவீதத்திற்கு மேல் அதிகமாகும்.

மலைகளின் இளவரசி எனப் புகழப்படும் உதகமண்டலம், ஏலகிரி, கொல்லி மலை, ஏற்காடு முதலான பல மலைவளக் காட்சிகளும், குற்றாலம், பாபநாசம், திற்பரப்பு முதலிய பல நீர்வீழ்ச்சிகளும், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மாமல்லபுரம் கடற்கரை கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், சிதம்பரம் நடராசர் பெருங்கோயில், திருவரங்கம் அரங்கநாதன் திருக்கோயில், முருகனின் அறுபடை வீடுகள் முதலிய பல தெய்வீகச் சுற்றுலா மையங்களும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், முதுமலை வனவிலங்கு சரணாலயம், கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயம் முதலிய பல சரணாலயங்களும் அமைந்து சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கின்றன.

தமிழ்நாட்டின் முக்கிய விழாக்கள்

மதுரை சித்திரைத் திருவிழா, ஏற்காடு, கொடைக்கானல், ஜவ்வாது மலை முதலிய இடங்களில் கோடைவிழா, குற்றாலம், சுருளி அருவி முதலிய இடங்களில் சாரல் விழா, கொல்லி மலையில் வல்வில் ஓரி திருவிழா, பொங்கல் விழா முதலான பல்வேறு விழாக்கள் ஆண்டு தோறும் நடைபெற்று உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தளிக்கின்றன.

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஜனவரி வரை மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற " இந்திய நாட்டிய விழா" நடத்தப்படுகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்திய நாட்டிய விழாவில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலுமிருந்து வருகை புரியும் நடனக்கலைஞர்கள், செழுமையான பலதரப்பட்ட இந்திய நாட்டிய கலைகளை வழங்குகிறார்கள். அற்புதமான இந்திய நாட்டிய விழா கொண்டாட்டத்தைக் காண ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகிறார்கள். இத்துடன், திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா, சர்வதேச காத்தாடி திருவிழா முதலிய விழாக்களும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

4000 கிலோ மீட்டர் நீள இரயில் பாதை வசதிகள், சாலை வசதிகள், சென்னை தூத்துக்குடி, எண்ணூர், நாகை ஆகிய முக்கிய துறைமுகங்கள், 17 சிறு துறைமுகங்கள் விரைவான விமானப் போக்குவரத்துக்கு உதவும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய சர்வதேச விமான நிலையங்கள் சேலம், தூத்துக்குடி முதலிய உள்நாட்டு விமான நிலையங்கள் ஆகியவை சுற்றுலாத் துறை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை, திற்பரப்பு அருவி பகுதிகள் 7.15 கோடி ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. பூம்புகார் சிற்பக் கலைக்கூடத்தை ரூ.23.60 கோடி ஒதுக்கீட்டில் புதுப்பிக்கும் பணிகளில் 85 சதவீதம் முடிவடைந்து இதர பணிகள் நடைபெறுகின்றன. குற்றாலம் அருவிப் பகுதியில் ரூ.11.35 கோடியில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் படகு இல்லப்பகுதிகள் பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத் தலமாக ரூ.14.07 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ரூ.11.46 கோடியில் புதிய காட்சி முனைகள் அமைத்திடவும் தற்போதைய காட்சிமுனைகளை மேம்படுத்திடவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. யுனஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமான கங்கை கொண்ட சோழபுரம் கோயில் நுழைவு வளாகம் பல்வேறு வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது. ஏற்காடு நிலச்சீரமைப்பு, காட்சி முனை, பிற சுற்றுலா வசதிகள் ரூ.9.70 கோடியில் மேம்படுத்தப்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டிலும், உதகமண்டலம் ஏரிப்பகுதியில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டிலும், கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை மற்றும் கோவளம் கடற்கரைப் பகுதி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரைப் பகுதிகள் ரூ.3.07 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படுகின்றன.

சுற்றுலாத்துறை பெற்றுள்ள விருதுகள்

தமிழ்நாட்டில் சுற்றுலா வளர்ச்சிக்கும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பல்வேறு வசதிகளுக்கும் உரிய திட்டங்களை நிறைவேற்றிவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு பல்வேறு சுற்றுலா விருதுகளை வென்று புகழ் படைத்து வருகிறது.

புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேசச் சுற்றுலா மாநாடு மற்றும் பயண விருதுகளில் திருக்கோயில் சுற்றுலாவை ஊக்குவித்ததற்கான விருது; இந்தியா டுடே சுற்றுலா ஆய்வு விருதுகள் 2021 இல், சிறந்த மலைப்பகுதிக்கான விருது குன்னூருக்கும், இயற்கை எழில் கொஞ்சும் சாலை வகைப்பாட்டிற்கான விருது கொல்லி மலைக்கும் வழங்கப்பட்டுள்ளது. பசிபிக் பகுதி சுற்றுலா எழுத்தாளர்கள் சங்கம் ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறந்த மாநிலம் தமிழ்நாடு எனும் விருது, பிரம்மிக்க வைக்கும் மலைக்காட்சிகளுக்கான அவுட்லுக் டிராவலர் விருதுகள் - 2022 - விழாவில் குன்னூருக்கு வழங்கப்பட்ட வெள்ளி விருது, இந்தியாவின் சிறந்த சுற்றுலா அமைச்சர் 2023 விருது தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களுக்கும் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜப்பான் சுற்றுலா எக்ஸ்போ விருது இந்தியாவின் சிறந்த பாரம்பரியத் தலத்திற்கான வெள்ளி விருது, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் கோயில்களுக்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை பெற்ற விருது, பெர்லின் மாநகரில் 6.3.2024 அன்று நடைபெற்ற விழாவில் பசிபிக் பகுதி சுற்றுலா எழுத்தாளர் சங்கத்தால் தமிழ்நாடு கலாச்சார தலத்திற்கு வழங்கப்பட்ட சர்வதேசப் பயண விருதுகள் என எண்ணற்ற விருதுகளைப் பெற்று இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் துறை என திராவிட மாடல் அரசின் சுற்றுலாத் துறை புகழ்வடிவில் ஒளிர்கிறது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா மையங்களை மேம்படுத்தி, சுற்றுலா வரும் மக்கள் மனம் மகிழும் வகையில் அவர்களுக்குத் தேவைப்படும் வசதிகளை உருவாக்கி, உள்நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து, சுகமாகத் தங்கி மகிழ்ந்து புத்துணர்ச்சியுடன் பெருமிதம் கொள்ளும் வகையில் சுற்றுலா கழகத்தின் ஓட்டல்கள், அங்கு அறுசுவை உணவுகள், அவற்றுக்கான பயண வாகனங்கள், பாதுகாப்பு வசதிகள் அனைத்திலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கிடும் ஊக்கத்தால் திராவிட மாடல் அரசின் சுற்றுலாத்துறை இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத் துறையாகப் புகழ் பெருக்கிப் பாராட்டப்படுகிறது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story