தஞ்சைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை இந்த ஆண்டு 1 கோடியை தாண்டும்

தஞ்சைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை இந்த ஆண்டு 1 கோடியை தாண்டும்
தஞ்சைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை இந்த ஆண்டு 1 கோடியை தாண்டும்
Published on

தஞ்சைக்கு இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகை 1 கோடியை தாண்டும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

அமைச்சர் ராமச்சந்திரன்

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று தஞ்சை வந்தார். தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அருங்காட்சியகம், ராஜாளி பறவைகள் பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து தஞ்சை அரண்மனை, சரசுவதிமகால் நூலகம், தமிழ்நாடு ஓட்டல், பூம்புகார் விற்பனை நிலையம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பேட்டி

முன்னதாக அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதல் முறையாக தஞ்சை அருங்காட்சியகத்தில் தான் வருங்கால சந்ததியினரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழர்களின் கலை, பண்பாடு போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சைக்கு தான் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். கடந்த 2018-19-ம் ஆண்டுகளில் 1 கோடியே 80 லட்சம் பேர் தஞ்சைக்கு வந்தனர். 2019-ம் ஆண்டிலும் இதே அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதன் பின்னர் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. தற்போது சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

1 கோடியை தாண்டும்

கடந்த ஆண்டு 65 லட்சம் பேர் தஞ்சைக்கு வந்து சென்றனர். இந்த ஆண்டு கடந்த 4 மாதங்களில் மட்டும் 62 லட்சம் பேர் வந்துள்ளனர். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் தஞ்சைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை மூலம் கிடைக்கும் தொகை, சாதாரண கடைகள், ஏழைகள், வழிகாட்டிகள், கார் டிரைவர்கள் உள்ளிட்ட தொழில் செய்து வரும் அனைவருக்கும் சென்று சேர்கிறது. இதனால் தனி மனித வருவாய் உயர்கிறது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்திய அளவில் தமிழ்நாடு எப்போதும் முதலிடத்தில் இருந்து வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை உலக அதிசயங்கள் பட்டியலில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மருத்துவ சுற்றுலா

தமிழ்நாட்டில் இயற்கையாகவே கோவில்களின் எண்ணிக்கை அதிகம். அனைத்து கோவில்களிலும் உள்ள கலை நுணுக்கங்கள் போன்று வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழகத்திலுள்ள கோவில்களில் இருக்கும் சிற்பக்கலை போல வேறு எங்குமே பார்க்க முடியாது. மருத்துவச் சுற்றுலா தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 22 நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகிலேயே தமிழ்நாட்டில்தான் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் கிடைக்கிறது. அடுத்த முறை இன்னும் அதிகமான நாடுகளில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது கலெக்டர் தீபக்ஜேக்கப், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகப் பொதுமேலாளர் பாரதிதேவி, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், செயற்பொறியாளர் ஜெகதீசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com