கன்னியாகுமரியில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கன்னியாகுமரியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வேனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி, சில நிமிடங்களிலேயே அந்த வேன் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
கன்னியாகுமரியில் சுற்றுலா வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

கன்னியாகுமரி,

கேரள மாநிலத்திலிருந்து சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்குச் சுற்றுலா வந்த பயணிகள், தங்களது வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு சூரிய உதயம் மற்றும் விவேகானந்தர் பாறையைப் பார்க்கச் சென்றிருந்தனர். அப்போது நிறுத்தப்பட்டிருந்த அந்த வேனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி, சில நிமிடங்களிலேயே வாகனம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வேன் மளமளவென எரியத் தொடங்கியதைக் கண்ட சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அந்த வேன் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது.

விபத்து நடந்த சமயத்தில் வேனுக்குள் ஓட்டுநர் உட்பட பயணிகள் யாரும் இல்லாததால், ஒரு மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சுற்றுலா தலத்தின் முக்கிய சாலையில் நடந்த இந்த விபத்து, அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளிடையே சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com