

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் மருதூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் வேன் மூலம் வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று, விழுப்புரம் திரும்பியுள்ளனர். நாகை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் மோதியது.
இதில், மருதூர் கிராமத்தை சேர்ந்த பொன்முடி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேனில் பயணம் செய்த 15 நபர்கள் லேசான காயத்துடன் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாலை நடுவே கிடந்த வாகனத்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா வந்தவர்களின் வேன் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.