

சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கேரளம் மாநிலம், மலப்புரத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள் வால்பாறைக்கு சுற்றுலா வந்திருந்தவர்கள் பொள்ளாச்சி - வால்பாறை மலைப்பாதையில் வேன் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து 7 பேர் இறந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மலைப்பாதையில் வாகனம் ஓட்டுவது சாதாரண சாலையை விட அதிக கவனம், கட்டுப்பாடு, அனுபவம் தேவை. விபத்துகளை தவிர்க்க வாகனங்களை முழுமையாக பரிசோதனை செய்தபின் இயக்க வேண்டும். மலைப்பாதையில் சிறிய தவறும் பெரிய விபத்தாக மாறலாம். எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க மிகுந்த கவனம் தேவை.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புகிறேன்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.