குற்றால அருவியில் 6 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

தற்போது மழை அளவு குறைந்துள்ளதால் குற்றால அருவியில் நீர்வரத்து சீராகியுள்ளது.
தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த சூழலில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் கடந்த 6 நாட்களாக நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்த நிலையில், தற்போது மழை அளவு குறைந்துள்ளதால் குற்றால அருவியில் நீர்வரத்து சீராகியுள்ளது. இதனையடுத்து குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6 நாட்களுக்கு பிறகு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்தனர்.






