விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி

பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
Published on

குமரி,

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டப தியான மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்கள் தியானம் செய்ய இருக்கிறார். இதையொட்டி கன்னியாகுமரி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் தமிழக போலீசாரிடம் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல வழக்கம்போல் அனுமதியுங்கள் என்று கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் பிரதமர் மோடி தியானம் செய்யும் தியான மண்டபத்துக்கோ, அதன் அருகில் உள்ள புத்தக நிலையம் மற்றும் விவேகானந்தர் மண்டப பொறுப்பாளர் அலுவலகத்துக்கோ செல்ல அனுமதி இல்லை எனவும், சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் ஸ்ரீபாதம் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தியானம் செய்யும் பிரதமரை சந்திக்க சுற்றுலா பயணிகளுக்கோ, பா.ஜனதா கட்சி பிரமுகர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனவே பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளும் 3 நாட்களும் சுற்றுலா பயணிகள் படகு மூலம் விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்று வர எந்த தடையும் இல்லை என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகு தளத்தில் 8 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே படகில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கட்டாயம் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் எனவும் போலீசார் கூறியுள்ளனர். விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் பைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com