

குன்னூர்,
குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 போ பலியானார்கள். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை ராணுவத்தினரும் போலீசாரும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த பகுதியில் பொதுமக்கள் நுழையாதவாறு சீல் வைத்தனர். இந்தநிலையில் ஹெலிகாப்டரின் சிறிய பாகங்கள் உடைத்து எடுக்கப்பட்டது. என்ஜின் போன்ற ராட்சத பாகங்கள் எலக்ட்ரிக் ரோப் மூலம் நேற்று முன்தினம் முழுமையாக சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் ராணுவத்தினர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை தங்களது கட்டுபாட்டிலிருந்து விடுவித்தனர்.
இதையடுத்து கட்டுப்பாடு விலக்கி கொள்ளப்பட்டதால் சுற்றுலா பயணிகள் விபத்து நடந்த இடத்தை ஆர்வமுடன் பார்வையிட குவிந்தனர். அவர்கள் அங்கு தங்கள் செல்போன் மூலம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.