

நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அங்குள்ள நீரூற்றுகள், நீர்நிலைகள் வேக மாக வறண்டு வருகின்றன. இதனால் களக்காட்டில் உள்ள தலையணை பகுதிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.
எனவே களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் சிசில் கில்பர்ட் உத்தரவின் பேரில், களக்காடு தலையணை நேற்று மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்த பிறகு மீண்டும் தலையணையில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று வனச்சரகர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.