

தென்காசி,
குற்றாலம் மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதால், அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் மெயின் அருவியில் கடந்த ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது மெயின் அருவியில் இருந்த பழைய ஆர்ச் அகற்றப்பட்டு, சற்று இடைவெளியில் புதியதாக பெரிய வளைவு கட்டப்பட்டது. தரைத்தளத்திலும் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகள் நிறைவடைவதற்குள் குற்றாலத்தில் சீசன் தொடங்கியதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததால், பராமரிப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. வெள்ளத்திலும் சேதமடையாதவாறு ராட்சத கற்கள் பதிக்கப்படுகின்றன. மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் லேசாக தண்ணீர் விழுகிறது. அதனை திருப்பி விட்டு, அங்கு தரைத் தள கற்கள் பதிக்கப்படுகின்றன.
இதையொட்டி மெயின் அருவி மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் பராமரிப்பு பணிகளை விரைவில் நிறைவு செய்தவுடன் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.