கொடைக்கானலில் 'ரீல்ஸ்' மோகத்தில் தொடர்ந்து அத்துமீறும் சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் ரீல்ஸ் மோகத்தில் தொடர்ந்து அத்துமீறும் சுற்றுலா பயணிகள்
x

‘ரீல்ஸ்’ மோகத்தில் சுற்றுலா பயணிகளில் சிலர், ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.

கொடைக்கானல்,

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்ததை வீடியோவாக எடுத்து, அதனை யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 'ரீல்ஸ்' வீடியோவாக பதிவிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தநிலையில் சுற்றுலா பயணிகளில் சிலர், 'ரீல்ஸ்' மோகத்தில் சில ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கார், ஜீப்களில் ஜன்னல்களில் வெளிபுறம் அமர்ந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தற்போது அதிகரித்துள்ளது. மேலும் சிலர் சுற்றுலா பஸ், வேனின் மேல் பகுதியிலும், முன்பகுதியிலும் நின்றபடி, அமர்ந்தபடி வாகனங்களை ஓடவிட்டு 'ரீல்ஸ்' வீடியோ எடுக்கின்றனர்.

இதனால் வீடியோ எடுப்பவர்கள் விபத்தில் சிக்குவதுடன், பாதசாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதற்கிடையே கொடைக்கானல் அப்சர்வேட்டரி பிரதான சாலையில் நேற்று மாலை சுற்றுலா பயணிகள் 2 பேர் காரின் ஜன்னலின் வெளிபுறம் அமர்ந்தபடி வீடியோ எடுத்துக்கொண்டே வந்தனர். இதனை கண்ட சக வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

எனவே 'ரீல்ஸ்' மோகத்தில் இதுபோன்று தொடர்ந்து அத்துமீறும் நபர்கள் மீது போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story