குருசடை தீவை படகில் சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

மன்னார்வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடை தீவை பைபர் படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
குருசடை தீவை படகில் சென்று ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
Published on

ராமேசுவரம், 

மன்னார்வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடை தீவை பைபர் படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

குருசடை தீவு

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் தூத்துக்குடி இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. அதுபோல் இயற்கையாகவே இந்த 21 தீவுகளை சுற்றியுள்ள கடல் பகுதியில் 3,600 வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர இந்த தீவை சுற்றி உள்ள கடல் பகுதியில் பல வகையான பாசிகளும் உள்ளன.

இந்த 21 தீவுகளும் தேசிய கடல் சார் பூங்காவாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக அறக்கட்டளை மூலம் கண்காணித்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மேலும் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் உள்ள பாம்பன் அருகே உள்ள குருசடைதீவு, மண்டபம் அருகே உள்ள மனோலி தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கும் சூழல் சார்ந்த சுற்றுலாத் திட்டத்தின் கீழ் மாவட்ட வனத்துறை மூலம் சுற்றுலா படகு சவாரியும் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

படகு சவாரி

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் குந்துகால் பகுதியில் இருந்து குருசடை தீவுக்கு தொடங்கி நடைபெற்று வரும் சுற்றுலா படகு போக்குவரத்து சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கோடைகால விடுமுறை முடிந்துள்ள நிலையிலும் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவு பகுதியை காண சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து இயக்கப்படும் பைபர் படகில் சுற்றுலா பயணிகள் லைப் ஜாக்கெட் அணிந்தபடி மிகுந்த ஆர்வமுடன் குருசடைதீவு வரை பயணம் செய்தனர். இவ்வாறு பயணம் செய்த சுற்றுலா பயணிகள் படகில் அமர்ந்தபடி கடல் மற்றும் தீவை சுற்றியுள்ள மரம், செடிகளின் அழகையும், விவேகானந்தர் மணி மண்டப கட்டிடத்தையும் பார்த்து ரசித்தனர்.

அருங்காட்சியகத்தை பார்த்தனர்

மேலும் படகிலிருந்து தீவு பகுதியில் இறங்கி அங்கு வைக்கப்பட்டுள்ள இறந்து போன திமிங்கலங்களின் தாடை, எலும்பு மற்றும் கடலில் மிதக்கும் பவளப்பாறைகள் கடல்வாழ் உயிரினங்களின் அருங்காட்சியகங்களையும் மிகுந்த ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். குரு சடைதீவு வரையிலும் வனத்துறை பைபர் படகில் பயணம் செய்து வர பெரியவர் ஒருவருக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தில் இருந்து அனுமதி கடிதத்துடன் வந்தால் ரூ.250 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com