வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வர்.

இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசி மணல் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 8 மணி நிலவரப்படி 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

இந்த நிலையில் வார விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் அவர்கள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர்.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் பரிசல் ஓட்டிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com