

அலைமோதிய சுற்றுலா பயணிகள்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை, தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
அதன்படி, வார விடுமுறையையொட்டி கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் கொடைக்கானலில் அலைமோதியது. குறிப்பாக நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.
பனிமூட்டம், சாரல் மழை
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கனமழை பெய்தது. ஆனால் நேற்று காலை முதலே மிதமான வெயில், பனி மூட்டம், சாரல் மழையுடன் கூடிய இதமான குளிர்ந்த சீதோஷ்ண சூழ்நிலை நிலவியது.
இதயத்தை வருடும் இதமான கால நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். மேலும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களான பைன் மரக் காடுகள், பில்லர் ராக், குணா குகை, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இ்டங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மோயர் சதுக்கம் பகுதியில் புகைமூட்டம்போல் தரையிறங்கிய மேக கூட்டம் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்தது.
படகுசவாரி
கொடைக்கானல் வெள்ளிநீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அந்த அருவிகளின் எழில் கொஞ்சும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில், சாரல் மழையில் நனைந்தவாறு படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். மேலும் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பலரும் மகிழ்ச்சி அடைந்தனர்.