கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்

ஓணம் பண்டிகை மற்றும் வாரவிடுமுறையையாட்டி கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Published on

சுற்றுலா பயணிகள்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக பண்டிகை காலம் மற்றும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

இந்தநிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையை முடித்த கையோடு, அந்த மாநிலத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே வார விடுமுறை என்பதால், கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

நேற்று அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் தங்களது கார், வேன், இருசக்கர வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால், பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அணிவகுத்த வாகனங்கள்

குறிப்பாக வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடி, மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி, கல்லறை மேடு, நாயுடுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது சாலையின் இருபுறமும் 5 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். இதையடுத்து கொடைக்கானல் போக்குவரத்து போலீசார், நெரிசல் ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அதைத்தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து சுற்றுலா இடங்களுக்கு புறப்பட்டு சென்றன.

படகு சவாரி

இதற்கிடையே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்ததால் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள் களைகட்டின. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, மோயர் பாயிண்ட், குணா குகை, பில்லர்ராக், பைன்மரக்காடு உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

இதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com