ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்...!

வார விடுமுறையான இன்று கோடையை கொண்டாட ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
Published on

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார். இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இன்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசலில் சென்றனர்.

மேலும் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்தனர்.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள் ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்காவல் படையினர் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com