தொடர் விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘குமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குளிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்புக்கு வருவது வழக்கம். தற்போது. மலையோர பகுதிகளில் மழை பெய்து வருவதால் அருவியில் நல்ல நீர்வரத்து உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், ஓணம் பண்டிகை, மிலாடிநபி தினம் மற்றும் வாரஇறுதி என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு குடும்பத்தோடு படையெடுத்துள்ளனர். அந்த வகையில் கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து நீண்ட நேரம் விளையாடினர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்த நிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






