

நெல்லை,
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் மீண்டும் அனுமதி அளித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் மாஞ்சோலை, காக்காச்சி போன்ற எஸ்டேட் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அருவியில் குளிப்பதற்கு வனத்துறை தற்காலிகத் தடை விதித்திருந்தது. தடையின் போது இயற்கை அழகைக் காண மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்து, அருவிக்கு வரும் நீர்வரத்து முழுமையாகச் சீரடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நேற்று முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் அருவியில் இறங்கி குளிக்க முறைப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அங்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.