மே தின விடுமுறையையொட்டி இன்று ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தருமபுரி,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

இங்கு சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வர். இதனிடையே இன்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் இன்று மே தின விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி சென்றனர்.

ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com