கொடைக்கானலில் நாவல் மர வேர்களை சுற்றி வேலி அமைக்கும் பணி: சுற்றுலா பயணிகள் அதிருப்தி

சுற்றுலா பயணிகள் நாவல் மரங்களின் வேர்கள் மீது அமர்ந்து புகைப்படம் எடுக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
கொடைக்கானலில் நாவல் மர வேர்களை சுற்றி வேலி அமைக்கும் பணி: சுற்றுலா பயணிகள் அதிருப்தி
Published on: 

கொடைக்கானல்,

மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் குணாகுகையும் ஒன்று. இந்த இடத்தை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதுதவிர குணாகுகை பகுதிக்கு செல்லும் வழியில் நாவல் மரங்களின் வேர்கள் மண்ணின் மேற்பரப்பில் வளைந்து, நெளிந்து பிரமிக்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த வேர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன், அதில் குழுவாக அமர்ந்து புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர்.

தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி

இந்தநிலையில் 500 ஆண்டுகள் பழமையான நாவல் மரங்களின் வேர்கள் பாதிக்கப்படுவதாக கூறி வனத்துறையினர் அந்த வேர்கள் பகுதியை சுற்றி தடுப்பு வேலி அமைக்க முடிவு செய்தனர். அத்துடன் அருகில் இருந்து வேர்களை பார்த்து ரசிக்கும் படியும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, தற்போது வேர்கள் பகுதியை சுற்றிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இதற்கிடையே குணாகுகை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நாவல் மரங்களின் வேர்கள் மீது அமர்ந்து புகைப்படம் எடுக்கமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். மேலும் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் நாவல் மரங்களின் வேர்கள் மீது அமர்ந்து ரசிக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "குணாகுகை பகுதியில் உள்ள அதிசய நாவல் மரங்களின் வேர்கள் மீது சுற்றுலாப் பயணிகள் அமர்வதால், அவை சேதமடைந்து வருகின்றன. தற்போது வரை 50 சதவீத வேர்கள் சேதமடைந்துள்ளன. எனவே மீதமுள்ள வேர்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் மலை நாவல் மரங்கள் பாதுகாக்கும் சூழல் உருவாகும்" என்றனர்.

X