நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் வழியாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன; பயணிகள் மகிழ்ச்சி

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் வழியாக நேற்று முதல் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் வழியாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன; பயணிகள் மகிழ்ச்சி
Published on

பஸ்நிலையம் கட்டும் பணி

நெல்லை மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை புதிதாக கட்ட ரூ.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கின. சந்திப்பு பஸ் நிலையம் வழியாக பஸ்கள் வர தடை விதிக்கப்பட்டது. 5 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் பஸ்நிலைய பணி இன்னும் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பஸ்நிலையத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

ஆணையாளர் ஆய்வு

இந்த நிலையில் பொதுமக்கள், பயணிகள் பயன்பெறும் வகையில் பஸ்நிலையத்தை சுற்றியாவது பஸ்களை இயக்க வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சந்திப்பு பஸ்நிலைய பகுதியை ஆய்வு செய்தனர். பின்னர் மாநகர பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களை மட்டும் சந்திப்பு பஸ்நிலைய பகுதி வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பஸ்கள் இயக்க வசதியாக, பஸ்நிலைய கட்டுமான பணிக்காக சுற்றிலும் அடைக்கப்பட்டு இருந்த தகரங்களை அகற்றி சற்று உள்ளே தள்ளிவைத்து அடைக்கப்பட்டது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

மேலும் பஸ்நிலையத்தின் கிழக்குப்பகுதியில் 4 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டன. எந்தெந்த நிறுத்தங்களில் எந்தெந்த பகுதிக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்லும் என்ற விவரங்களும் மாநகராட்சி சார்பில் முறையாக அறிவிக்கப்பட்டது. தாடர்ந்து நற்று காலை 6 மணி முதல் சந்திப்பு பஸ் நிலைய வெளிப்புற பகுதியில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், நயினார் நாகேந்திரன், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் நெல்லை வடக்கு மாவட்ட வணிகர் சங்க தலைவர் செல்வராஜ், மண்டல தலைவர்கள் ரேவதி, மகேஸ்வரி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், மண்டல சுகாதார அதிகாரி சாகுல் ஹமீது, கவுன்சிலர்கள் ரம்ஜான் அலி, கந்தன், டாக்டர் சங்கர், வில்சன் மணித்துரை, உலகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பயணிகள் மகிழ்ச்சி

சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு பஸ் நிலைய பகுதி வழியாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். முன்பு நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சந்திப்பு பகுதிக்கு வருபவர்கள் அரவிந்த் கண் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வர வேண்டிய நிலை இருந்தது. தற்போது சந்திப்பு பஸ் நிலையத்துக்கே டவுன் பஸ்கள் வந்து செல்வதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் தென்காசி, புளியங்குடி, முக்கூடல், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் பஸ்களையும் விரைவில் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் தார் சாலை இன்னும் அமைக்கப்படாததால் பஸ்கள் வந்து செல்லும்போது புழுதி பறந்தபடி உள்ளது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

பஸ்கள் இயக்கப்படும் விவரம்

தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட 1-வது பஸ் நிறுத்தத்தில் இருந்து புதிய பஸ்நிலையத்துக்கு செல்லும் பஸ்களும், 2-வது நிறுத்தத்தில் இருந்து பாளையங்கோட்டை பஸ்நிலையம் மார்க்கமாக செல்லும் பஸ்களும், 3-வது நிறுத்தத்தில் இருந்து பாளையங்கோட்டை மார்க்கெட் மார்க்கமாக செல்லும் பஸ்களும், 4-வது நிறுத்தத்தில் இருந்து டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்களும், அம்பேத்கர் சிலை எதிரே அமைக்கப்பட்ட 5-வது பஸ்நிறுத்தத்தில் இருந்து தச்சநல்லூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com