எண்ணூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு மாசுக்கள்: விசாரணை நடத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்

எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரின் குடியிருப்புகளில் படிந்திருக்கும் நச்சு உலோக மாசுக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

எண்ணூர் தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை எண்ணூர் சத்தியவாணி முத்து நகரில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்பட்ட தூசி மாதிரிகளில் யுரேனியம், காட்மியம் உள்ளிட்ட நச்சு உலோகங்கள் அதிகளவு கலந்திருப்பதாக வெளியாகியிருக்கும் பகுப்பாய்வு குறித்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

குடியிருப்புகளுக்குள் காணப்படும் மாசுக்கள் தொடர்பாக மாசுக்கட்டு வாரியத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பொதுமக்களே மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தி உண்மை நிலவரங்களை வெளிக்கொண்டு வரும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எண்ணூர் பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளில் இருந்து கடந்த பல வாரங்களாக வெளியேறிக் கொண்டிருக்கும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் இருமல், கண் எரிச்சல், தொண்டை வலி மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு இதே எண்ணூரில் ஏற்பட்ட அம்மோனியா கசிவை விட மிகவும் ஆபத்து மிக்கதாக கருதப்படும் இந்த உலோக நச்சுக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் உணவு மற்றும் அருந்தும் குடிநீரில் கலந்திருக்கும் அபாயமும் ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, எண்ணூர் சத்தியவாணிமுத்து நகரின் குடியிருப்புகளில் படிந்திருக்கும் நச்சு உலோக மாசுக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதோடு, அப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளையும் உடனடியாக வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com