தூத்துக்குடியில் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை: முதியவர் கைது

ஏரல்-முக்காணி மெயின் ரோட்டில் வியாபாரி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர் அந்த வியாபாரியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆலடியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 78). இவர் துபாயில் மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தங்கம். இந்த தம்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். தங்கராஜ் தனது குடும்பத்தினருடன் துபாயிலேயே குடியிருந்து வந்தார்.
கோவில் திருவிழா, முக்கியமான நிகழ்ச்சிக்கு மட்டும் சொந்த ஊருக்கு வருவாராம். இவர் தற்போது ஆலடியூர் அருகே ஆற்றங்கரை தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கராஜ் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று இரவில் அவர் புதிதாக வீடு கட்டும் இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஏரல்-முக்காணி மெயின் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர் தங்கராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. நிரேஷ், ஏரல் இன்ஸ்பெக்டர் பத்மநாதபிள்ளை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதே ஊரை சேர்ந்த மூக்காண்டி(68) என்பவர் கொலை செய்தது தெரியவந்து. போலீசார் முதற்கட்ட விசாரணையில் மூக்காண்டியின் மகன் கோட்டாளமுத்து(28) துபாயில் வேலை பார்த்துள்ளார். அவரை தங்கராஜ் அங்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கோட்டாளமுத்து இறந்துவிட்டார். அவரை சொந்த ஊருக்கு கொண்டுவராமல் துபாயிலேயே அடக்கம் செய்துவிட்டார்களாம். இதனால் மூக்காண்டி கடும் ஆத்திரத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மூக்காண்டி கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்தது. இந்த நிலையில தலைமறைவாக இருந்த மூக்காண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






