

சென்னை,
சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக் கூட்டரங்கில் வணிகவரி அதிகாரிகளின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு வணிகவரித்துறையில் மொத்தம் 338 வரிவிதிப்பு வட்டங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 12.40 லட்சம் வணிகர்கள் ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ளனர். வரி செலுத்துவோர் சமர்ப்பிக்கும் 'ரிட்டர்ன்ஸ்' அடிப்படையில் ஆய்வுகள் செய்யப்பட்டு, குறைபாடு கண்டறியப்பட்ட இனங்களில் வரி செலுத்துவோருக்கு தாக்கீது வழங்கப்படுகிறது. வணிகர்கள், நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள்.இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாக இருக்கும் இடத்தில் இருந்தே விசாரணையை எதிர்கொள்ளலாம். இந்த முறை, நாளை (இன்று) முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துறைச் செயலாளர் குமரகுருபரன். வணிகவரித்துறை ஆணையர் நாகராஜன் மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.