வியாபாரிகள் அதிருப்தி: வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.102.50 உயர்ந்து சென்னையில் ரூ.2 ஆயிரத்து 508.50 ஆக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. இதனால் டீக்கடை மற்றும் உணவகங்கள் நடத்துபவர்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர்.
வியாபாரிகள் அதிருப்தி: வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.102 உயர்வு
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் கியாஸ் விலை மாதத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு

கடந்த ஏப்ரல் மாதம் வர்த்தக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.268.50 அதிகரிக்கப்பட்டது. இதனால் சென்னையில் ஒரு வர்த்தக கியாஸ் சிலிண்டர் ரூ.2,406-க்கு விற்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மே மாதத்தின் முதல்நாளான நேற்று வர்த்தக கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.102.50 அதிரடியாக உயர்த்தப்பட்டது. அதன்படி சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.2 ஆயிரத்து 508.50 ஆக உள்ளது. மும்பையில் ரூ,2,355.50, கொல்கத்தாவில் 2,455-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக சிலிண்டர் விலை அதிகரித்து வருவதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.965.50 ஆகவே நீடிக்கிறது. பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றம் இல்லை.

டீக்கடை வியாபாரிகள் அதிருப்தி

இதுகுறித்து மயிலாப்பூரை சேர்ந்த டீக்கடை மற்றும் ஓட்டல் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியதாவது:-

கொரோனாவுக்கு பிறகு தற்போதுதான் வியாபாரம் கொஞ்சம் தலை தூக்கி வருகிறது. அதற்குள் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மாதந்தோறும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை உயர்த்தி கொண்டே இருக்கின்றனர். இவ்வாறு உயர்த்துவதால் சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சிலிண்டர் விலைக்கு தகுந்தவாறு உணவு பொருட்களின் விலைகளையும் உயர்த்த முடியவில்லை. போட்டி நிறைந்த உலகில் விலையை உயர்த்தினால் வியாபாரம் படுத்து விடுகிறது.

சிறுகடை நடத்துபவர்கள் நலன் கருதி சிலிண்டர்களின் விலைகளை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com