வெள்ளையன் உடலுக்கு வியாபாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

வெள்ளையன் உடல் அடக்கம் சொந்த ஊரில் நாளை நடைபெறுகிறது.
வெள்ளையன் உடலுக்கு வியாபாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
Published on

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மரணம் அடைந்த வெள்ளையனின் உடல் பெரம்பூரில் உள்ள வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வியாபாரிகள் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,மாபா.பாண்டியராஜன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மாநில தலைவர் முத்தரசன், தொழில் அதிபர் வி.ஜி. சந்தோசம், பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன், இந்திய முஸ்லீம் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு ஆகியோர் நேற்று வெள்ளையன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, மாதவரம் மூர்த்தி, தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, இந்திய நாடார்கள் பேரமைப்பு பொதுச்செயலாளர் கே.எஸ்.மலர்மன்னன் ஆகியோர் இன்று வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

வெள்ளையனின் உடல் இன்று பிற்பகல் 3 மணி வரை பெரம்பூரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த பிச்சிவிளை கிராமத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. அங்கு நாளை பிற்பகல் 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ளது.

வெள்ளையன் மறைவையொட்டி இன்று வடசென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வெள்ளையன் உடல் நாளை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுவதையொட்டி தென்மாவட்டங்களில் நாளை கடைகள் அடைக்கப்படுகின்றன. மேலும் வணிகர் சங்க அமைப்புகளின் கொடி 3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படுகிறது.

இந்தநிலையில், வெள்ளையன் மகன் மெஸ்மர்காந்தன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், எனது தந்தை வெள்ளையன் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். பெரம்பூரில் அவர் வசித்த சாலைக்கு வெள்ளையன் சாலை என்று பெயர் சூட்ட வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com