

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி தொடங்கி அடுத்தாண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை ஒரு நிதியாண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. அப்போது அனைத்து நிறுவனத்திலும் புதுக்கணக்கு தொடங்கப்படுவது வழக்கம். கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், கொசுவலைஉற்பத்தி கூடங்கள், பஸ் கூண்டு கட்டும் நிறுவனங்கள், நிதிநிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கா ன வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனால் கரூரில் ஆண்டுதோறும் புதுக்கணக்கு தொடங்கும் நிகழ்ச்சி விசேஷமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியான நேற்று கரூரில் புதுக்கணக்கு தொடங்கப்பட்டது. இதனையொட்டி அனைத்து நிறுவனங்களிலும் மா, இலை தோரணங்கள், வாழை மரக்கன்றுகள் கட்டப்பட்டு, வண்ண கோலங்கள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் நிறுவனங்களின் பெயர் பலகைகளுக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டடு புதுக்கணக்கு தொடங்கப்பட்டது. புதுக்கணக்கு தொடங்குவதையொட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஒருசில நிறுவனங்களில் சிறுத்தொகை மற்றும் இனிப்புகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மேலும் கரூரில் புதுக்கணக்கு தொடங்கப்படுவதையொட்டி கரூரில் உள்ள ஓட்டல்களில் புதுக்கணக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.