இறையானூரில் பாரம்பரிய உணவு பொருட்கள், வேளாண் கருவிகள் கண்காட்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்

இறையானூரில் பாரம்பரிய உணவு பொருட்கள், வேளாண் கருவிகள் கண்காட்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்.
இறையானூரில் பாரம்பரிய உணவு பொருட்கள், வேளாண் கருவிகள் கண்காட்சி அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்தார்
Published on

திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த இறையானூர் பகுதியில் வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளது. இங்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து பாரம்பரிய பன்முகத் தன்மைக்கான கண்காட்சியை நடத்தியது.

கண்காட்சியில் பாரம்பரிய வேளாண் கருவிகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் பாரம்பரிய உணவு பொருட்கள் விதைகள், அவற்றால் செய்யப்பட்ட உணவு பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு இருந்தன. கண்காட்சி தொடக்க விழாவுக்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். முன்னதாக வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வரவேற்றார். திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா தேஜா ரவி வாழ்த்துரை வழங்கினார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து, பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகையில், விவசாய பெருமக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் விவசாய துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்துள்ளார். எனவே விவசாயிகள் தங்களது குறைகளை உங்கள் பகுதி சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக கவனத்திற்கு கொண்டு வந்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அதை சரிசெய்து தருவார்.

இவ்வாறு அவர் பேசினார்

விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன், மரக்காணம் ஒன்றியகுழு தலைவர் தயாளன், துணைதலைவர் பழனி, திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் குமார், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் கண்ணகி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் பழனிவேல், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பழனிவேல், ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதி, இறையானூர் ஊராட்சி மன்ற தலைவர் கஜலட்சுமி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பாரம்பரிய உணவு தொடர்பாக நறுவீரப்பட்டு வள்ளலார் சன்மார்க்க சங்க வில்லுப்பாட்டு குழுவினரின் வில்லிசையும் நடைபெற்றது. முடிவில் உதவி இயக்குனர் சரவணன் நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com