

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இந்த மலையை சுற்றி பார்க்க தமிழகம் மட்டும் அல்லாது கேரளம், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், வல்வில் ஓரி விழாவையொட்டி, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், கொல்லிமலை மலைப்பாதையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாள்களுக்கு தற்காலிகமாக ஒருவழிப் போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொல்லிமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் காரவள்ளி மலைப்பாதை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். அதேபோல், கொல்லிமலையில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் முள்ளுக்குறிச்சி மலைப்பாதை வழியாக மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, செம்மேடு, செங்கரை, சோளக்காடு ஆகிய இடங்களில் உள்ள 3 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் சேந்தமங்கலம் வட்டம், காரவள்ளியில் செயல்படும் ஒரு மதுபான சில்லறை விற்பனைக் கடை என 4 கடைகளும் இரண்டு நாட்கள் கட்டாயம் மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாளை நாமக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.