விஜய் வருகையின் போது போக்குவரத்துக்கு இடையூறு: போலீசார் வழக்குப்பதிவு

கோவையில் விஜய் தலைமையில் நேற்று பூத் கமிட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவை,
தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். முதல்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் கருத்தரங்கு நேற்று கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் தொடங்கியது. கருத்தரங்கில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார். கருத்தரங்கில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்தது. தவெக தொண்டர்களின் கூட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தவெக கருத்தரங்கில் பங்கேற்க விஜய் வந்த போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் பயணிகளுக்கு இடையூறு, தடுப்புகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது ஆகிய சம்பவங்களுக்காகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கார், பைக் உள்பட 133 வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. கோவை பீளமேடு காவல் நிலையத்தில் மேற்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.






