

சென்னை,
சென்னை அடையாறு பகுதியில் மெட்ரோ ரெயில் பாதை பணிக்காக சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:-
மெட்ரோ ரெயில் பாதை பணிக்காக அடையாறு எல்.பி. சாலையில் பெட்ரோல் நிலைய சிக்னல் சந்திப்பில் இருந்து எம்.ஜி. சாலை சந்திப்பு வரை முழுவதுமாக மூடப்பட உள்ளது. இதையொட்டி, இன்று (சனிக்கிழமை) முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப் படுகிறது. திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் அனைத்து பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் எல்.பி. மற்றும் எம்.ஜி. சாலை சந்திப்பிலிருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு எம்.ஜி. சாலை சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக எல்.பி. சாலையை அடையலாம். அதேபோல், பெசன்ட் நகரில் இருந்து 7-வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள்-மகாத்மா காந்தி சாலையை அடைந்து, வலது புறம் திரும்பி சாஸ்திரி நகர் 1-வது பிரதான சாலை இடதுபுறம் திரும்பி, சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ வழியாக எல்.பி. சாலைக்கு வரலாம்.
எல்.பி. சாலையில் இருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள், சாஸ்திரிநகர் 1-வது அவென்யூ சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி, 11-வது குறுக்கு சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி, 8-வது குறுக்கு சாலையை அடைந்து பின்பு வலதுபுறம் திரும்பி. 10-வது குறுக்கு சாலை வழியாக எம்.ஜி. சாலையை அடையலாம். இதுவரையில் சாஸ்திரிநகர் 1-வது பிரதான சாலையில் இருந்து மகாத்மா காந்தி சாலை வழியாக எல்.பி. சாலை வரையிலும், சாஸ்திரிநகர் 1-வது அவென்யூ சாலையில் இருந்து சாஸ்திரிநகர் 1-வது பிரதான சாலை வரை ஒரு வழிப்பாதையாக இருந்தது. தற்போது இரு வழி பாதையாக மாற்றப்படுகிறது.
அதேபோல, சாஸ்திரிநகர் 1-வது பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் சாலை, ஒரு வழிப்பாதையாகவும் மற்றும் 11-வது குறுக்கு சாலை திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்படுகிறது. திருவான்மியூரில் இருந்து திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் இலகு ரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் எல்.பி. மற்றும் எம்.ஜி. சாலை சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பி, இந்திரா நகர் 2-வது அவென்யூ சாலையை அடைந்து வலது புறம் திரும்பி. 1-வது பிரதான சாலை வழியாக வலது மற்றும் இடது புறம் திரும்பி. 1-வது அவென்யூ சாலையை அடைந்து மீண்டும் வலது புறம் திரும்பி, எல்.பி. மற்றும் இந்தியன் ஆயில் சிக்னல் சந்திப்பை அடைந்து இடதுபுறம் திரும்பி தங்கள் இலக்குகளை அடையலாம்.
இந்திரா நகர் 2-வது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் தடைசெய்யப்படுகின்றன. மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.