அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடக்கம்: தமிழகம் முழுவதும் 5 லட்சம் லாரிகள் ஓடவில்லை

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தால் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடக்கம்: தமிழகம் முழுவதும் 5 லட்சம் லாரிகள் ஓடவில்லை
Published on

சென்னை,

அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம், சுங்கச்சாவடி கட்டணம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்பட சுமார் 10க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் நேற்று லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கியது. இதனால், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சரக்குகள் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடங்கியது.

இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் ஜவுளிகள் மற்றும் பட்டாசுகளையும் கொண்டு செல்ல முடியாமல் அந்த பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் அந்த இடங்களிலேயே சமைத்து சாப்பிட்டனர்.

லாரிகள் வேலை நிறுத்தம் குறித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் துணை தலைவர் பி.வி.சுப்பிரமணி கூறியதாவது:

லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகள் மீதான ஜி.எஸ்.டி. வரியை லாரி உரிமையாளர்கள் கட்ட வேண்டும் என்பதை எடுக்க வேண்டும். லாரிகள் வாங்கும் போதும், விற்பனை செய்யும் போதும் இரு முறை விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியையும் ரத்து செய்ய வேண்டும்.

டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வதற்கு பதில் காலாண்டுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும், சுங்கச்சாவடி கட்டணத்தை ஆண்டுக்கு ஒரு முறை நேஷனல் பெர்மிட் பெறும் போதே கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இதனால் தமிழகம் முழுவதும் 5 லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் லாரி உரிமையாளர்கள், வணிகர்கள், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி இழப்பீடு என சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் 93 லட்சம் லாரிகள் ஓடவில்லை. சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் புதன்கிழமை முதல் லாரிகள் ஓடும். அதன் பின் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறும்போது, அதிக அளவில் மணல் குவாரிகளை இயக்க வலியுறுத்தி ஏற்கனவே மணல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் குறைந்த அளவிலான மணல் லாரிகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில், நேற்று லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியதன் காரணமாக அந்த லாரிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com