திருப்பூர் மேம்பால பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து சீரமைப்பு

தற்போது பாலத்தின் இருபகுதிகளிலும் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மேம்பால பகுதியில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து சீரமைப்பு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாநகர பகுதியில் யுனிவர்சல் சாலையையும், ஈஸ்வரன்கோவில் சாலையையும் இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை கடந்த 4-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். ஆனால் சரியான திட்டமிடுதல் இல்லாமல் மேம்பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால் தாறுமாறாக சென்ற வாகனங்களால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

இந்தநிலையில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி புதிய பாலப்பகுதிக்கு நேற்று காலை வந்தார். சிறிதுநேரம் அவர் அங்கு போக்குவரத்து நடைபெறுவதை பார்வையிட்டார். இதையடுத்து போக்குவரத்தை முறைப்படுத்த அங்கு தடுப்புகளை (பேரிகார்டுகள்) அமைக்கவும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் செல்லும் பகுதியிலும், ஸ்ரீசக்தி தியேட்டர் பகுதியிலும் போக்குவரத்தை முறைப்படுத்த சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதன் காரணமாக தற்போது பாலத்தின் இருபகுதிகளிலும் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தடுப்புகள் உயரமாக இருப்பதால் எதிரேயும், வலது, இடது புறத்திலும் இருந்து வரும் வாகனங்களை இருசக்கர வாகன ஓட்டிகளால் பார்க்க முடியவில்லை. எனவே கூடிய விரைவில் இந்த தடுப்புகளை அகற்றிவிட்டு உயரம் குறைந்த கான்கிரீட் தடுப்புகளை அமைக்கவேண்டும். மேலும் பாலத்துக்கு சற்று நெருக்கமாக வேகத்தடைகள் அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com