கரூர் கூட்ட நெரிசல்: நாட்டை உலுக்கிய கோர சம்பவம் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியாகி உள்ளனர்.
த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய், வாரம்தோறும் சனிக்கிழமையன்று பிரசார கூட்டங்களை நடத்தி வருகிறார். முதல் கட்டமாக திருச்சி, அரியலூரில் பிரசாரத்தை தொடங்கிய அவர்,2-ம் கட்டமாக நாகைமற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்தார். அந்த வரிசையில் 3-வது கட்டபிரசாரத்தை நாமக்கல்லில் நேற்று தொடங்கினார்.
இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து நாமக்கல் சென்றார். அங்கு காலை 8.45 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் மதியம் 2.30 மணிக்கு பிரசார இடத்தை சென்று அடைந்தார்.
அங்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு கரூர் புறப்பட்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நேற்று பகல் 12 மணியளவில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரை காண நேற்று காலை முதலே அந்த கட்சியின் தொண்டர்கள் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர்.
இதில் பெண்கள், குழந்தைகளும் ஏராளமாக வந்திருந்தனர். அவர்கள் நேற்று இரவு வரை விஜய் பிரசாரம் செய்ய வந்த இடத்தின் அருகிலேயே காத்திருந்தனர். ஆனால் விஜய்யின் பிரசார வாகனம் நேற்று மாலை சுமார் 5.40 மணியளவிலேயே கரூரை அடைந்தது. பின்னர் வழிநெடுகிலும் ஏராளமானவர்கள் திரண்டிருந்ததால், விஜய்யின் வாகனம் ஊர்ந்தவாறு பிரசார கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தால், அந்த வாகனம் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனது. இதையடுத்து அவர் இரவு 7 மணியளவிலேயே கரூரில் பிரசாரம் நடைபெற்ற இடத்தை வந்தடைந்தார்.
கூட்ட நெரிசல்
அப்போது அவரது வாகனத்தை பின்தொடர்ந்து ஏராளமானவர்கள் வந்ததாலும், ஏற்கனவே பிரசாரம் நடைபெறும் இடத்தில் ஏராளமானோர் திரண்டிருந்ததாலும் அங்கு மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதற்கு மத்தியில் விஜய் அந்த பிரசார கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக அந்த பகுதியின் அருகே உள்ள கடையின் முன்பகுதியில் ஆஸ்பெஸ்டாஸ் சீட், தென்னங்கீற்றுகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் சரிந்து விழுந்தன. இதில் அங்கு நின்று கொண்டிருந்த சிலர் காயமடைந்தனர்.
அதேநேரத்தில் கூட்டநெரிசலின் காரணமாக ஏராளமானவர்கள் மயங்கி விழுந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் சுமார் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆவார்கள். இதையடுத்து மயக்கம் ஏற்பட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களை உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, தனித்தனியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அவர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மயக்கமடைந்த சிறுவர்களை அவர்களது உறவினர்கள் கதறி அழுதவாறு தூக்கி வந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதையடுத்து கூட்டம் நடந்த இடம் அருகே பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு ஏராளமானவர்கள் திரண்டிருந்த நிலையில், அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால், போலீசார் லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைந்து போக செய்தனர். இதனால் அந்த இடம் கலவர பூமி போல் காட்சியளித்தது.
சிறிது நேரத்திற்கு முன்பு கூட்டத்தினரின் ஆரவாரத்தாலும், உற்சாகத்தாலும் களைகட்டிய அந்த பகுதி, பின்னர் சோகமயமாக மாறியது. இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் மாயமானார்கள். விழா ஏற்பட்டாளர்கள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து, சிறுவர், சிறுமிகளை மீட்டு, அவர்களது பெற்றோர்களை அழைத்து, அவர்களிடம் ஒப்படைத்தனர்.
குழந்தைகள் உள்பட 40 பேர் பலி
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் முதற்கட்ட தகவல் படி 39 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இதில் 10 பேர் குழந்தைகள், 17 பேர் பெண்கள், 13 பேர் ஆண்கள் ஆவர்.
போர்க்களம்போல் காட்சியளித்தது
கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக, சம்பவ இடத்துக்கு ஏராளமான ஆம்புலன்சுகள் வந்தன. அவற்றில் இருந்து வந்த சைரன் ஒலிகள் போர்க்கால காட்சியைபோல் இருந்தது. சம்பவ இடத்தில் ஏராளமான செருப்புகள் சிதறிக்கிடந்தன. அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது.
கதறி அழுத உறவினர்கள்
பிரசாரம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்தவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஏற்றி அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளித்து உயிரை காப்பாற்ற போராடினர். ஆனால் பலரை காப்பாற்ற முடியாமல் போனது. ஆஸ்பத்திரிக்கு வரும் போதே பலர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களின் உறவினர்கள் இறந்தவர்களின் உடலை பார்த்து கதறிஅழுதது பரிதாபமாக இருந்தது.
கரூர் விரைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தநிலையில், இதனை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மிகுந்த துயரம் அடைந்தார். இருப்பினும் அவர் மின்னல் வேகத்தில் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கினார். தானே அனைவரையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உத்தரவுகளை பிறப்பித்தப்படி இருந்தார்.
முதலில் அவர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வை தொடர்பு கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். பின்னர் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரை செல்போனில் அழைத்து விரைவில் அங்கு செல்லுங்கள் என்றார். தொடர்ந்து உளவுத்துறை ஐ.ஜி.டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தொடர்பு கொண்டு சம்பவ நிலவரங்களை கேட்டறிந்து, உடனே அவரையும் கரூர் செல்லுமாறு உத்தரவிட்டார்.
பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை துறை செயலாளர் செந்தில்குமாரை தொடர்பு கொண்டு ஆஸ்பத்திரியில் உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய வேண்டும் என்றார்.
கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலுவை தொடர்பு கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீட்புப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும் பணிகளை முன்னின்று கவனிக்க வேண்டும் என்றும், அனைவரும் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அதேபோல திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் ஆகிய 3 மாவட்ட கலெக்டர்களையும் தொடர்பு கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவரும் உடனடியாக கரூருக்கு செல்ல வேண்டும் என்றும், அங்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.
கூடுதல் டாக்டர்கள்
பின்னர் மருத்துவ கல்லூரி இயக்குனரை தொடர்பு கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கரூரை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்களை உடனடியாக கரூருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இவை எல்லாவற்றையும் முதல்-அமைச்சர் சில நிமிடங்களில் செய்து முடித்தார். தொடர்ந்து நேற்று நள்ளிரவை தாண்டியும் கரூர் நிலவரத்தை கண்காணித்து கொண்டும், உத்தரவுகளை பிறப்பித்தப்படியும் இருந்தார்.
அதேபோல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கரூர் விரைந்தார். இதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு முதல்-அமைச்சர் திருச்சிக்கு விமானத்தில் புறப்பட்டார். அங்கிருந்து கரூர் சென்றார். அங்கு அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பேசினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் கைது செய்யப்படுவாரா? என செய்தியாளர் ஒருவர் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- “அதற்கு தான் உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது. அந்த ஆணையம் விசாரித்து முழுமையாக சொல்லும். இதற்கிடையில், நீங்கள் கேட்பது போல அரசியல் நோக்கத்தோடு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. மீண்டும் மீண்டும் இதை தான் சொல்லப்போகிறேன். ஆணையம் அதற்காக தான் அமைத்திருக்கிறோம். ஆணையத்தின் மூலம் உண்மை வெளிவரும். உண்மை வெளிவரும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இதனிடையே கரூர் நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணா துயரமும் வேதனையும் அடைந்தேன். விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடுசெய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும். அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற ஐகோ ர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பில் டிஜிபி வெங்கட்ராமன்
கரூர் சம்பவம் குறித்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின் போது கூறுகையில், “சம்பவத்தில் மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். அவர்கள் முதலில் அனுமதி கேட்டது லைட்டவுஸ் ரவுண்டான மற்றும் உழவர் சந்தை பகுதியில்தான். அது இதைவிட நெரிசலான பகுதி. இந்த கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம். ஆனால் மதியம் 3 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குதான் வந்தார். ஆனால் அக்கட்சி தலைமையின் டுவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கினர். ஆனால் விஜய் 7.50 மணிக்குதான் வந்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் காரணம் தெரிய வரும்” என்று அவர் கூறினார்.",
கருத்து கூறாமல் திருச்சியில் இருந்து சென்னை புறப்பட்ட நடிகர் விஜய்
கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்தநிலையில் கரூரில் பிரசாரத்தை முடித்து கொண்டு நடிகர் விஜய் நேற்று இரவு 9 மணி அளவில் திருச்சி விமானநிலையத்தில் இருந்து சென்னை செல்வார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து நடிகர் விஜய்யின் கருத்தை அறிவதற்காக திருச்சி விமானநிலையம் முன்பு ஏராளமான பத்திரிக்கையாளர்கள் திரண்டு இருந்தனர். விஜய் பத்திரிகையாளர்களிடம் பேசுவார் என விமானநிலையத்தில் தயார் நிலையில் காத்திருந்தனர். ஆனால் நேற்று இரவு 10 மணி அளவில் விமானநிலையம் வந்த நடிகர் விஜய் பத்திரிகையாளர்களை தவிர்த்து எந்த கருத்தும் கூறாமல் விமானத்தில் சென்னை புறப்பட்டார்.
த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்ய வாய்ப்பு
'புஷ்பா-2' திரைப்பட ரிலீஸின்போது ஐதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என ஐகோர்ட்டு கூறியிருந்தது. இந்தநிலையில் தான் கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 38 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் விஜய் உள்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜய் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதற்கு முன்பு மத நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட நெரிசலில் தான் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து இருக்கிறது. ஆனால் ஒரு அரசியல் கட்சி கூட்டத்தில் இவ்வளவு பேர் பலியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே ஆந்திராவில் கடந்த 2022-ம் ஆண்டு நெல்லூர் கண்டுகூரில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பேர் பலியாகி இருந்தனர்.








